×

கடமலைக்குண்டு மலையடிவார கிராமங்களில் காட்டுயானைக் கூட்டம் அடிக்கடி விசிட்

*சாகுபடிகளை நாசம் செய்வதால் விவசாயிகள் அச்சம்

வருசநாடு : ஆண்டிபட்டி அருகே, கடமலைக்குண்டு பகுதி மலையடிவார கிராமங்களில் காட்டுயானைக் கூட்டம் திடீர், திடீரென முகாமிட்டு சாகுபடிகளை நாசம் செய்து வருகிறது. மேலும், தோப்புகளில் தென்னை, வாழைகளை நாசம் செய்கிறது. இதனால், விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர். எனவே, காட்டுயானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, கடமலைக்குண்டு கிராமத்தில், ஏழுசுனை மலையடிவாரப் பகுதி உள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் முருங்கை, தென்னை, வாழை, கொட்டை முந்திரி, இலவம் ஆகிய சாகுபடி நடந்து வருகிறது. கடந்த மாதம் 18ம் தேதி ஏழுசுனை மலையடிவாரத்தில் முகாமிட்ட காட்டுயானைக் கூட்டம், ராமராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து 100க்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகளை சேதப்படுத்தியது. மறுநாள் மற்றொரு தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள் பைப் லைன்கள் உடைத்தும், தென்னை மரங்களை பிடுங்கி எறிந்தும் நாசப்டுத்தியது.

மீண்டும், மீண்டும் அட்டாக்கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் அதே பகுதியில் முகாமிட்ட காட்டுயானைக் கூட்டம், மல்லையசாமி என்பவரின் தோட்டத்தில் புகுந்து 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. மறுநாள் அதே தோட்டத்தில் 10 மரங்களை சேதப்படுத்தியது. தகவலறிந்த கண்டமனூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் பட்டாசு வெடித்து யானைக் கூட்டத்தை விரட்டினர்.

கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்று வருகின்றனர். ஆனால், காட்டுயானைக் கூட்டம் திடீர், திடீரென முகாம்களை மாற்றுவதும், விவசாயிகள் அசந்த நேரத்தில் தோட்டத்திற்குள் புகுந்து சாகுபடிகளை நாசம் செய்து வருகின்றன. இதனால், இரவு நேரங்களில் தனியாக இருக்கும் தோட்டங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சப்படுகின்றனர். எனவே, காட்டுயானைக் கூட்டத்தின் நடமாட்டத்தை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும். தண்ணீர், உணவு தேடி வரும் யானைகளுக்கு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். அவைகளின் உணவுக்கு மூங்கில் காடுகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post கடமலைக்குண்டு மலையடிவார கிராமங்களில் காட்டுயானைக் கூட்டம் அடிக்கடி விசிட் appeared first on Dinakaran.

Tags : Kadamalaikundu ,Varusanadu ,Andipatti ,
× RELATED மயிலாடும்பாறை பகுதியில் வெட்டி அழிக்கப்படும் தென்னை மரங்கள்